கவர்னரிடம் சரமாரி புகார் அளித்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள்..!
துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கவர்னரிடம், ‘அமைதியான முறையில் அறவழியில் போராடிய எங்களிடம் போலீசார் அராஜகமாக நடந்துகொண்டார்கள்.
துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குமுறினார்கள். அதை பொறுமையாக கேட்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும், இனிமேல் வழக்கு போடப்படாது என உத்தரவாதம் தரவேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். அதற்கு கவர்னர், இதுபற்றி முதல் அமைச்சரிடம் பேசுகிறேன் என்றார்.
முன்னதாக துப்பாக்கி சூட்டில் பலியான சாயர்புரம் செல்வசேகர் வீட்டில் செல்வசேகரின் தாயார் மாசானம் அம்மாள் மற்றும் சகோதரிகள் சாந்தா, சீதா ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது செல்வசேகர் குடும்பத்தார் கவர்னரிடம், ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும்.
ஏற்கனவே முன்பு இது போல் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்ட ஆலையை கோர்ட்டு உத்தரவு என கூறி திறந்துவிட்டார்கள். இந்த முறை அதுபோல் இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியை விட்டே அப்புறப்படுத்தவேண்டும்’ என்றனர்.