கர்நாடகம் நீரின் அளவை குறைத்தது!குறுவை பயிரிட முடியாததால் காவிரிப் பாசன விவசாயிகள் கவலை!
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கர்நாடகத்தில் மழை குறைந்ததால், கபினி அணையில் இருந்து காவிரியாற்றுக்குத் திறந்துவிடப்படும் நீரின் அளவு ஐயாயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து குறுவை நெல் பயிரிடுவதற்குத் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
காவிரிப் பாசன மாவட்டங்களில் குறுவை நெல் பயிரிடுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் பன்னிரண்டாம் நாள் தண்ணீர் திறக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாகக் கர்நாடகத்தில் இருந்து உரிய தண்ணீர் தமிழகத்துக்குத் திறந்துவிடப்படாததால் மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரிப் பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நாளில் இருந்து இரு வாரங்களாகக் கர்நாடகத்தில் நல்ல மழை பெய்ததால் கபினி அணை கிட்டத்தட்ட நிறையும் தருவாயில் உள்ளது. சில நாட்களாகப் பலத்த மழை பெய்ததால் நொடிக்கு 35ஆயிரம் கனஅடி நீர் காவிரியாற்றுக்குத் திறந்துவிடப்பட்டது.
இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணைக்கும் நொடிக்கு முப்பதாயிரம் கன அடிக்கு மேல் நீர் வந்துகொண்டிருந்ததால் 124அடி கொள்ளளவுள்ள அணையின் நீர்மட்டம் நூறடியைத் தாண்டியுள்ளது. கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தமிழக எல்லைக்குள் வந்துள்ள நிலையில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கபினி அணைக்கு நீர்வரத்து நொடிக்குப் பத்தாயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரும் நொடிக்கு ஐயாயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் குறைந்தது 90அடி உயரத்துக்காவது தண்ணீர் இருந்தால்தான் காவிரிப் பாசன மாவட்டங்களில் குறுவை நெல் பயிரிடப் போதுமான அளவு தண்ணீரைத் திறந்துவிட முடியும். காவிரியில் தமிழகத்துக்குத் திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைந்துவிட்டதாலும் இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையில் 40அடிக்கே தண்ணீர் உள்ளதாலும் குறுவை பயிரிடுவதற்குத் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பில்லை. எனினும் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இப்போது போதிய அளவு தண்ணீர் உள்ளதால் அவற்றில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரைத் திறந்துவிட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் அணையில் ஜூன் இருபதுக்குள் தண்ணீர் திறந்துவிட்டால்தான் அந்த நீர் 10நாட்களுக்குள் கடைமடைப் பகுதிவரை சென்றடையும். அதன்பின் நாற்றுப் பாவி ஒருமாதம் வளர்ந்தபின் நாற்றைப் பிடுங்கி நட முடியும். இந்தப் பயிரை வடகிழக்குப் பருவமழைக்கு முன் அறுவடை செய்ய முடியும். ஜூலை மாதத்தில் தண்ணீர் திறந்து குறுவை நெல் பயிரிட்டால் வடகிழக்குப் பருவமழையால் விளைச்சலும் அறுவடையும் பாதிக்கப்படும்.இதனால் காலங்கடந்து மேட்டூர் அணை நிரம்பினால் சம்பா நெல் பயிரிட ஏதுவாக ஆகஸ்டு 15க்குப் பிறகு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதே சிறந்தது என வேளாண் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.