கரூர் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு..!
கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில் கரூர் தொழிலாளர் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் நல்லசிவம், சின்னையன், ஜோதிமாணிக்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் கரூரில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் சட்டத்திற்கு புறம்பாக கடைகள் – நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனரா? என ஆய்வு செய்தனர்.
அப்போது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டம் 1986-ன் கீழ் 51 கடைகள், 27 உணவு நிறுவனங்கள், மற்றும் 19 ஆட்டோ மொபைல் ஒர்க்ஷாப்புகளில் ஆய்வு நடந்தது.
இந்த ஆய்வில் குழந்தை தொழிலாளர்கள் அங்கு பணியமர்த்தப்படவில்லை என தெரியவந்தது. மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தை தொழிலாளர்களை யாரேனும் பணியமர்த்தினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்கப்படும் என தொழிலாளர் துறை அதிகாரிகள் கடைகள்- நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத்துறையினர் தெரிவித்தனர்.