கன்னியாகுமரியில் காதல் கணவரை கொலை செய்ய முயன்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு!
காதல் கணவனின் நடத்தையில் சந்தேகமடைந்து, கன்னியாகுமரி அருகே அவரின் கழுத்தை அறுத்தும் கம்பியால் தாக்கியும் கொலை செய்ய முயன்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
களியக்காவிளை மரியகிரி பகுதியைச் சேர்ந்த ஓட்டுனரான சர்ஜின் என்பவரும், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த பிபிதா என்ற பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின் சர்ஜினுக்கு பல பெண்களுடன் முறையற்று உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவி இடையே அவ்வப்போது தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சர்ஜினுக்கும், பிபிதாவுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது சர்ஜின் பிபிதாவைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிபிதா, இன்று காலை வீட்டில் சர்ஜின் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது தலையில் இரும்புக் கம்பியால் பலமாகத் தாக்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சர்ஜின் சத்தம்போட முயலவே கத்தியால் அவரது கழுத்தை பிபிதாஅறுத்துள்ளார். இரத்த வெள்ளத்தில் சர்ஜின் கூச்சலிட்டதால் அச்சமடைந்த பிபிதா கதவுகளை பூட்டிவிட்டு தப்பினார்.
உடைகளில் ரத்தக்கரையுடன் பிபிதா தப்பிச் சென்றதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவரை பிடித்து வைத்தனர்.
மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சர்ஜினை மீட்டு கேரள மாநிலம் பாறசாலையில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பபிதாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.