கடல் அலையால் வீடுகள் இழந்தவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல்..!
பட்டினப்பாக்கத்தில் கடல் அலையால் வீடுகள் இழந்தவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார். ‘மீனவர்களை இடம் மாற சொல்வது சரியல்ல’ என அவர் தெரிவித்தார்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ஏற்பட்டு மண் அரிப்பால் வீடுகள் சேதம் அடைந்தன. நேற்று வரை 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலை சீற்றத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.
கடல் அலை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட்டு ஆறுதல் சொல்ல மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதிக்கு வந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர் வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
மய்யம் விசில் செயலியில் இதுதொடர்பான செய்தியை தாமதமாகவே தெரிவித்து இருக்கிறார்கள். அதனால் தான் நான் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. நான் ஒரு நடிகனாக ஸ்டூடியோ அருகில் இருக்க ஆசைப்படுவேன்.
விவசாயி, வயல்வெளி அருகில் வசிக்க ஆசைப்படுவார். மீனவர்கள், கடற்கரை அருகில் இருக்க தான் ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு மாற்று இடம் காஞ்சீபுரத்தில் கொடுத்தால், அவர்கள் எப்படி மீன்பிடிக்க இங்கு வருவார்கள்?.என கேள்வி எழுப்பினார் .
கடலுக்கு அருகில் இருந்தால் தான் அவர்களுக்கு வசதியாக இருக்கும். அவர்களை இடம் மாற்றுவது, தொழிலை மாற்றுவதற்கு சமம். மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், இடம் மாற சொல்வது சரியல்ல. இதற்கென தனித்துறை இருக்கிறது. அந்த துறை இதற்கு நல்ல தீர்வு சொல்ல வேண்டும்.