கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஊழியர் படுகாயம்..!

Default Image

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பணிக்கன் குப்பம் சந்தை தோப்பு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக மணிவேல் (வயது 49) என்பவரும், உதவியாளராக பண்ருட்டி சத்திய மூர்த்திதெருவை சேர்ந்த கண்ணன் (39) என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.

நேற்று இரவு 2 பேரும் டாஸ்மாக் கடையில் மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். இரவு 9 மணி அளவில் மர்ம மனிதர்கள் சிலர் டாஸ்மாக் கடையின் பின் பக்கம் உள்ள ஜன்னல் வழியாக திடீரென்று பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கடையின் உள்ளே விழுந்த பெட்ரோல் குண்டு தீப்பிடித்து எரிந்தது. பெட்ரோல் குண்டு வெடித்ததில் கண்ணன் பலத்த தீக்காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

படுகாயம் அடைந்த கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வடலூர் அருகே உள்ள கருங்குழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் போலீஸ்காரர் ஒருவர் மட்டும் இருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் மர்ம மனிதர்கள் சிலர் வந்தனர். டாஸ்மாக்கடை முன்பு போலீஸ் இருப்பதை பார்த்ததும் தாங்கள் கொண்டுவந்திருந்த மண்எண்ணை பாட்டிலை டாஸ்மாக்கடை முன்பு வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்மியம்பேட்டை-செம் மண்டலம் இணைப்பு சாலையில் உள்ள டாஸ் மாக் கடையில் மர்ம மனிதர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். அதுபோல நடுவீரப்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம மனிதர்கள் புகுந்து டாஸ்மாக் கடையை அடித்து உடைத்து சூறையாடினார்கள். அங்கிருந்து மதுபாட்டில்களையும் உடைத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை மீது தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசி வருவதால் டாஸ் மாக்கடை ஊழியர்கள் அச்சமடைந்தள்ளனர்.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்த கட்சியை சேர்ந்தவர்கள் டாஸ்மாக்கடை மீது பெட்ரோல்குண்டு வீசியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே கம்மியம் பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் பெட் ரோல் குண்டு வீசியதில் சேத மடைந்தகடையை நேற்று இரவு டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையத்தில் சூறையாடப்பட்ட டாஸ்மாக் கடையையும் பார்வையிட்டார்.

அதன்பின்பு அவர் கூறும்போது, கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் தொடர்ந்து பெட்ரோல்குண்டு வீசப்பட்டு வருகிறது. மேலும் ஒருசில வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகள், அரசு பணிமனை மற்றும் பஸ் நிலையங்களுக்கு போலீஸ்பாதுகாப்பு போடப்படும் என்றார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்