கடலூரில் மீனவகளுக்கிடையே மோதல் அதிமுக பிரமுகர் ஒருவர் பலி பலத்த போலீஸ் பாதுகாப்பு..!
சுருக்கு வலையை பயன் படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் கிராம மீனவர்களுக்கிடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தேவனாம்பட்டினம் கிராம மீனவர்கள் கையில் கத்தி, அரிவாள், சுளுக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பம் கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் அந்த பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டார். மேலும் படுகாயம் அடைந்த பாண்டியன், ஏலாயி, முனியம்மாள் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் தொடர்ந்து 2 கிராமங்களிலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசார் மட்டுமின்றி விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை போன்ற வெளிமாவட்டங்களிலும் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு மொத்தம் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடலூர் சோனாங்குப்பம் கிராமம், சிங்காரத்தோப்பு பாலம், துறைமுகம் மீன்பிடி இறங்குதளம், படகுகள் நிறுத்தும் இடம் ஆகிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் உப்பனாற்றில் இருந்து கடலூர் முகத்துவாரம் வழியாக கடலில் 4 படகுகளில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு வருகிறார்கள்.
சோனாங்குப்பம் கிராமத்தில் படகுகள் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் உப்பனாற்றின் இருபுறமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பஞ்சநாதனை கொலை செய்த குற்றவாளிகள் வெளியூர் தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
சோனாங்குப்பம் கிராமத்துக்குள் புகுந்து அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதனை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 தனிப்படை அமைத்துள்ளோம். இந்த தனிப்படையினர் 22 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிலரை தேடி வருகிறார்கள். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்றார்