கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசு கோரும் தகவல்களை அளிக்க தாமதிக்கவில்லை : தமிழக அரசு விளக்கம்….!!
கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசு கோரும் தகவல்களை வழங்க மாநில அரசு தாமதிக்கவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கஜா புயல் பாதிப்பு தொடர்பான பொதுநல வழக்கு ஒன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, கஜா பாதிப்பு தொடர்பான மத்திய அரசு குழுவின் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய ஏன் காலதாமதம் ஆகிறது என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், தாங்கள் கோரிய தகவல்களை தராமல் தமிழக அரசு தான் தாமதிப்பதாக குற்றம்சாட்டினார். இந்தநிலையில் மத்திய அரசு கோரும் தகவல்களை கொடுக்க மாநில அரசு தாமதிக்கவில்லை என்று கூறிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், கஜா புயல் பாதிப்பு குறித்த அனைத்து தகவல்களையும் இன்றே தர தயார் என்று தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.