கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2,700 கோடி வழங்க தமிழக அரசு வலியுறுத்தல்
கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக 2 ஆயிரத்து 700 கோடி வழங்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார். கஜா புயல் பாதித்த பகுதிகளில் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்தியக் குழுவினர் நேரில் ஆய்வு செய்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையிலான குழு டெல்லியில் நாடாளுமன்ற நிலைக்குழுவுடன் ஆலோசனை நடத்தியது. இடைக்கால நிவாரணமாக 2 ஆயிரத்து 700 கோடி வழங்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. வீரப்ப மொய்லி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கஜா புயல் தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கோபாவை அழைத்து ஆலோசனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. கஜா புயல் தொடர்பான அடுத்த கூட்டம் வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது.