ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கடலோர கிராமத்தைச் சேர்ந்த நபர்களுக்கு பேரிடர் மேலாண் பயிற்சி ! தமிழக அரசு
ஊரக வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் ,தமிழக கடலோர கிராமங்களில் வசிக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு நடப்பு நிதியாண்டில் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்த கொள்கை விளக்க குறிப்பேட்டை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். அதில், 2018-19ஆம் ஆண்டில் 561 கடலோர கிராமங்களில் உள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 332 நபர்களுக்கு 5 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசின் தூய்மை பாரதம் இயக்கத்தின் இலக்கை 2019ஆம் ஆண்டுக்குள் அடைய, அனைத்து முயற்சிகளும் முடுக்கிவிடப்படும் என்றும், 2019ஆம் ஆண்டுக்குள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உருவாகும் மட்கும் கழிவுகள் மூலம் உரம் தயாரிக்க சிறிய உர உற்பத்தி கூடங்கள் அமைக்கப்படும் என்றும், அவை முதற்கட்டமாக திருச்சி, வேலூர் மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படும் என்றும் கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக, தூத்துக்குடி, சேலம், திண்டுக்கல், நெல்லை மாநகராட்சிகளிலும், ஆவடி, பூந்தமல்லி, திருவண்ணாமலை, உதகை உள்ளிட்ட நகராட்சிகளிலும் உர உற்பத்தி கூடங்கள் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.