ஒருபோதும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முடியாது!உயர்நீதிமன்ற நீதிபதிகள்
உயர்நீதிமன்ற நீதிபதிகள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முடியாது என கருத்துத் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்ததாக கூறியுள்ள மூன்று துணை வட்டாட்சியர்களையும் எதிர்மனுதாரர்களை சேர்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வழக்கறிஞர் முத்து அமுதநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது முறையான அனுமதி இல்லாமல் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.தமிழகத் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜிபி, தென்மண்டல ஐஜி, திருநெல்வேலி டிஐஜி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், சிப்காட் காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அளவுக்கு அதிகமாகப் போராட்டக்காரர்களின் கூட்டம் இருந்ததால் அவர்களின் அருகில் காவல்துறையினர் நெருங்க முடியவில்லை என்றும், தொலைவில் இருந்து தான் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்துத் துப்பாக்கிச் சூடு துரதிருஷ்டவசமானது என்றும், அதை நியாயப்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். கண்ணன், சேகர், சந்திரன் ஆகிய மூன்று துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்ததாகத் தெரிவித்துள்ளதால் அவர்கள் மூவரையும் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கவும் மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.