ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் பணக்காரர்களும், அரசியல் தலையீடும் ஆதிக்கமும் அதிகம்!  ஜி.கே வாசன்

Default Image

தமாக தலைவர்  ஜி.கே வாசன்,மத்திய அரசு – அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட பல்வேறு அரசுப்பணிகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளதை தவிர்த்து புதிய விதிமுறைகளை திணிப்பதன் மூலம் பணக்காரர்களும், அரசியல் தலியீட்டின் மூலமும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு நிர்ணயிக்கப்படும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமாக தலைவர் ஜி.கே. வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,‘‘அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட பல்வேறு அரசுப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்க நடைமுறையில் நடத்தப்பட்டு வந்த தேர்வு முறையில் புதிய விதிமுறையைத் திணிக்க மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது மத்திய அரசால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வின் மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பல வகையான பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் முறை நடைமுறையில் உள்ளது.

அந்த தேர்வு முறையின் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வுக்கு தகுதியானவர்கள். இந்த மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு செல்வார்கள். இறுதியாக நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும், மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும் சேர்த்து கணக்கிட்டு அதன் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் இந்த விதிமுறையால் ஒருவர் தான் விரும்பிய மாநிலத்தில் பணிபுரிய வாய்ப்புண்டு. ஆனால் நடைமுறையில் உள்ள விதிமுறையை மாற்ற தற்போது மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. அதாவது சிவில் சர்வீஸ் தேர்வின் மூலம் மெயின் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் முசௌரிக்கு சென்று 3 மாதப் பயிற்சியில் பங்கேற்க வேண்டும்.

அந்த பயிற்சியில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தான் ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். அல்லது வேறு எந்த ஒரு அரசுப் பணியும் கிடைப்பதும், எந்த மாநிலத்தில் அந்த பணி என்பதும் முடிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி எதற்காக, ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகளின் படி இறுதியாக நடைபெறும் நேர்முகத் தேர்வு வரை தொடர் முயற்சி, கடின உழைப்பை மேற்கொண்டவர்களுக்கு மீண்டும் ஒரு பயிற்சியில் பங்கேற்று அதில் வழங்கப்படும் மதிப்பெண்ணையும் கணக்கிட்டு தான் ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். அல்லது வேறு எந்த ஒரு அரசுப் பணியும் வழங்க முடியும் என்பதோடு அந்த பணியும் எந்த மாநிலம் என்று முடிவு செய்யப்படும் என்ற புதிய விதிமுறை ஏற்புடையதல்ல.

காரணம் தற்போது மத்திய பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்த நினைக்கும் புதிய முயற்சியால் பல வகையில் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புண்டு. அது மட்டுமல்ல பணக்காரர்களுக்கும், அரசியல் தலையீட்டுக்கும் வழி வகுக்கும். குறிப்பாக கல்வியாளர்களும், மாணவ, மாணவிகளும் இந்த புதிய விதிமுறையை ஏற்க மறுக்கிறார்கள். மேலும் இந்த புதிய விதிமுறையால் கிராமப்புறம், நகர்ப்புறம் என தமிழகம் முழுவதும் உள்ள ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே அகில இந்திய அரசுப்பணிகளுக்கு ஏற்கனவே மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் – யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் தேர்வு முறையே தொடரவும், புதிய விதிமுறையைத் தவிர்க்கவும் மத்திய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்