எஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!
நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகரை ,பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த மாதம் தனது ஆளுநர் மாளிகையில் பேட்டி கொடுத்தார். அப்போது பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தொட்டுப் பேசியது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் தனக்கு வந்த ஒரு பதிவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் சர்ச்சை எழுந்தது.
இதன்காரணமாக, எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே 10-ம் தேதியன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி எஸ்.வி.சேகர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இந்த சம்பவத்துக்கு எஸ்.வி.சேகர் ஏற்கெனவே மன்னிப்பு கோரிவிட்டார். அந்தப்பதிவையும் உடனடியாக நீக்கி விட்டார்.
அவருக்கு வந்த செய்தியை அப்படியே பார்வர்டு செய்தது மட்டுமே அவருடைய தவறு’’ என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள், வரும் ஜூன் 1-ம் தேதி வரை எஸ்.வி.சேகரை கைது செய்யக்கூடாது என தமிழக போலீஸாருக்கு அறிவுறுத்தி, இது தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.