`எத்தனை முறைப்பா நான் தோல்வியைத் தாங்குவேன்’ – தந்தைக்கு பிரதீபா எழுதிய உருக்கமான கடிதம்..!
“திரும்பவும் ஒரு தோல்வியைத் தாங்கும் சக்தி இல்லை. எத்தனை முறைப்பா நான் தோல்வியைத் தாங்குவேன்” என்று தந்தைக்கு உருக்கமாகக் கடிதம் எழுதிவைத்துக்கொண்டு தற்கொலை செய்துள்ளார் மாணவி பிரதீபா.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் பிரதீபா. ப்ளஸ் டூ தேர்வில் பிரதீபா 1,125 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். நீட் தேர்வில் 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மனமுடைந்த அவர், எலி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடலை அடக்கம் செய்ய அவரின் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஆட்சியர் நேரில் வந்தால்தான் உடலை அடக்கம் செய்வோம் என்று பிரதீபாவின் உறவினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். அங்கு எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதீபா குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் நீட் தேர்வை நிரந்தரமாகத் தடை செய்யக்கோரியும் தி.மு.க, பா.ம.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
இதனிடையே பிரதீபா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், அவரின் தந்தைக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிரதீபா தன் தந்தைக்கு உருக்கமாக எழுதியுள்ள கடிதத்தில்…
“உங்க அம்மு உங்ககிட்ட சொல்ல விரும்புவது, இதுவே கடைசி பா. சாரி அப்பா. என்னால ஜெயிக்க முடியல. நீ என் மேல வச்சிருந்த நம்பிக்கையை என்னால காப்பாத்த முடியல. திரும்பவும் ஒரு தோல்வியைத்தாங்கும் சக்தி இல்லை. எத்தனை முறைப்பா நான் தோல்வியைத் தாங்குவேன். தோல்வியடைந்ததாலே என்னாலே என் ஸ்கூலுக்குப் போக முடியல. என் டீச்சர்ஸை பார்த்து பேசுற தைரியம் இல்லை. என்னாலதானப்பா மத்தவங்க முன்னால இரண்டு வருஷமா தலைகுனிந்து வாழ்ந்த. என் ஆசை நீ மத்தவங்க முன்னாடி தலை நிமிர்ந்து வாழணும். ஆனா, என்னால அதைச் செய்ய முடியல. என் குடும்பம், நீங்க எல்லாம் எனக்குக் கிடைச்ச வரம் பா. நான் உங்களுக்கு கிடைச்ச சாபம்னு நினைக்கிறேன். எனக்குத் தோல்வியைத் தாங்குற சக்தி இல்லை. இந்த 2 வருஷமா இந்தச் சக்தியைக் கொடுத்தது நீதான்பா. ஆனா, இதுக்கு மேலையும் உனக்கு பாரமா இருக்க நான் விரும்பவில்லை. இந்த முடிவ நான் 2 வருஷத்துக்கு முன்னாடி எடுத்தப்பவே நீ என்ன தடுக்காம இருந்திருக்கலாம். அப்படி நான் செய்திருந்தால் 2 வருஷத்துல என்னை கொஞ்ச கொஞ்சமா மறந்திட்டு இருப்பீங்க. அதுனால நான் இப்ப அதை செய்யப்போறேன். ஏன்னா நான் உங்க எல்லாருடைய நம்பிக்கையையும் இழந்து நான் சாகப்போறேன். சாரி பா. லவ் யூ அப்பா.
எனக்கு வேற வழி தெரியலப்பா… நம்ம குடும்பம் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்க எல்லார்கூடவும் ரொம்ப நாள் சேர்ந்து வாழணும்னு ஆசையா இருக்கு. ஆனா, எனக்கு அந்தத் தகுதி இல்ல. இந்த முடிவு மத்தவங்களுக்குக் கோழைத்தனமா தெரியலாம். ஆனா, அடுத்தவங்க நம்ம மேல வெச்ச நம்பிக்கைய அழிச்சுட்டு வாழுறதைவிட இந்த முடிவே மேல். எனக்கு ஒரே ஒரு வருத்தம்பா. என்னால உங்களுக்கு சந்தோஷமும் தர முடியல. என்னால எல்லா சந்தோஷத்தையும் இழந்துடீங்க. அப்பா நீங்க எனக்கு தைரியம் கொடுத்த பிறகும் நான் இந்த முடிவு எடுக்குறது தப்புதான். ஆனால், என்னால தோல்வியைத் தாங்க முடியல. உங்க எல்லாரையும் விட்டுட்டுப் போகணும்னு நினைக்கும்போது ரொம்ப வலிக்குது. ஆனா, அதைவிட அதிகமான வலியை இந்தத் தோல்வி தந்துவிட்டது. என்னால மத்தவங்கள மாதிரி கிடைச்சத வச்சு வாழ முடியல. ஏன்னா அப்படி நான் வளரல. நான் மனசுல ஒண்ணு வச்சுட்டு வாழ்க்கை முழுவதும் வேற ஒரு வாழ்க்கையை வாழ விரும்பல. அந்த வலிய என்னால தாங்க முடியாது. என்ன மன்னிச்சிடும்மா, மன்னிச்சிடுக்கா, மன்னிச்சுடு அண்ணா… உங்க எல்லாரையும் miss பண்றேன். I Love My Family.. But my Failure going to me deadline.. sorry..
உங்க அம்மு” இவ்வாறு எழுதியுள்ளார்.