கோவை மாவட்டம் குனியமுத்தூரை சேர்ந்தவர் இளங்கோ இவர் கோவை அரசு மருத்துவ கல்லூரியில் பொது அறுவை சிகிச்சை துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மல்லிகா. இவர் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு அருண்திலக் , தனுஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் அருண்திலக் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். தனுஷ் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-வது ஆண்டு இன்ஜினீயரிங் படித்து வருகிறார்.
பாப்பான்குளத்தில் கடந்த 1-12-1989-ம் ஆண்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியில் சேர்ந்த இளங்கோ, பின்னர் பதவி உயர்வு பெற்று கடந்த 21-9-1990-ம் ஆண்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் அவர் கடந்த 19-1-1995-ம் ஆண்டு கோவை அரசு மருத்துவ கல்லூரி பொது அறுவை சிகிச்சை துறைக்கு மாற்றப்பட்டார். தற்போது அந்த துறையின் தலைவராக உள்ளார்.
மேலும் கடந்த 21-11-1981-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைத்துறை கோவை மண்டல அலுவலகத்தில் ஊழியராக மல்லிகா சேர்ந்தார். பின்னர் அவர் 16-11- 2010-ம் ஆண்டில் இளநிலை பொறியாளராக பதவி உயர்வு பெற்றார்.
பின்னர் அவர் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, வெள்ளக்கோவில் ஆகிய பகுதிகளில் பணியாற்றினார். தற்போது அவர் சென்னை கிண்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இன்ஜினீயராக உள்ளார்.
இவர்கள் இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து காவல்த்துறை துணை ஆய்வாளர் ராஜேஷ், இன்ஸ்பெக்டர் கனகசபாபதி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் அவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த 1-1-2008-ம் ஆண்டு முதல் 31-12-2013-ம் ஆண்டு வரை ரூ.90 லட்சத்து 51 ஆயிரத்தி 269-க்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.