ஊழலில் தமிழகம் முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை…
சென்னை அருகே மறைமலை நகரில் நிம்ரோட் என்ற ஒப்பந்ததாரர் அமைத்த சாலை தரமில்லாமல் சேதமடைந்ததால்.. இழப்பை வசூலிக்கும் நடவடிக்கையில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.இதை எதிர்த்த நிம்ரோட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுத்தது போக மீதமுள்ள தொகையில் சாலை அமைத்ததாகவும், அதிக போக்குவரத்து காரணமாக சாலை சேதமடைந்துள்ளதாகவும் நிம்ரோட் தரப்பில் வாதிடப்பட்டது.
நிம்ரோட் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுத்தது என்பது லஞ்சத்தை தவிர வேறு ஏதும் இல்லை எனவும், லஞ்சம் கொடுக்காமல் ஏதும் நடக்காது என்பது துரதிஷ்டவசமானது எனவும் வேதனை தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.