ஊடக சுதந்திரத்தைப் பறிக்கிறதா தமிழக அரசு..! பட்டியல்நீக்கம் செய்யப்படும் சேனல்கள்..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் ஆட்சிசெய்வதாகக் கூறிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், அதே ஜெயலலிதாவின் பாணியில் செய்தி ஊடகத்தினருக்கு அரசமைப்புக்கு விரோதமாக நெருக்கடி அளிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, அரசு தொலைக்காட்சி கேபிள் தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனல்கள் நீக்கப்படுவது தொடர்கதை ஆகியுள்ளது.
கடந்த வாரம் கோவையில் நடந்த ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் விவாத நிகழ்வில் பா.ஜ.க-வினர் பிரச்னை செய்ததையடுத்து, அந்த நிகழ்வு பாதியில் முடிக்கப்பட்டது.
அதையொட்டி கருத்துக்கூற முயன்ற இயக்குநர் அமீரைத் தாக்கமுயன்றவர்களை விட்டுவிட்டு, அமீர் மீதும் அந்த உரையாடலுக்குப் பொறுப்பான செய்தி ஊடகத்தினர் மீதும் புதிய தலைமுறை நிர்வாகிகள் மீதும் அரசு வழக்கு பதிந்துள்ளது. இதைக் கடுமையாகக் கண்டித்துள்ள அரசியல் கட்சிகள், அரசின் நடவடிக்கை கருத்துசுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும் குறிப்பிட்டுள்ளன.