உரிய நிவாரணம் மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு கிடைக்கவில்லை! உரிமையாளர்கள் வேதனை
இன்றுடன் சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து நிகழ்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்கள், இதுவரை தங்களுக்கான நிவாரணம் வேண்டி காத்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
மவுலிவாக்கம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி இடிந்து விழுந்த விபத்தில் 61பேர் உயிரிழந்தனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் அருகிலிருந்த மூன்று வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.
சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீட்டை இடிந்து விழுந்த கட்டிடத்தின் உரிமையாளர் வழங்கிட முன்வராத நிலையில், அரசாங்கமாவது வழங்கும் என்று நம்பி கடந்த 4 ஆண்டுகளாக சம்மந்தப்பட்ட அலுவலகங்களின் படிகளில் ஏறி ஏராளமான மனுக்களை கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். ஆயினும் இதுவரை தங்களுக்கான விடிவுகாலம் பிறக்கவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உழைத்து சேர்த்து கட்டி, வாழ்ந்த வீட்டை யாரோ செய்த தவறுகளால் இழந்து, இன்றைக்கு வாடகை வீட்டில் வாழ்ந்து வரும் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.