உயர்நீதிமன்றம் பேராசிரியர் நிர்மலா தேவியை சிபிஐ விசாரணைக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்தது!
சென்னை உயர்நீதிமன்றம்,கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் பேராசிரியர் நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவை, தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணிதவியல் துறை பேராசிரியர் நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
அதில், நிர்மலா தேவி மீது ஆட்கடத்தல் பிரிவில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், சம்பந்தப்பட்ட செல்வாக்கானவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏற்கனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருவதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், காவல் துறையினர் விசாரித்து வரும் வழக்குகளில் உயர்நீதிமன்றம் தலையிட கூடாது என உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனு நிலுவையில் இருப்பதால், அந்த மனுவில் இணைந்து கொள்ளும்படி மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.