உதவியும் இல்லை…உணவும் இல்லை….கதறும் மக்கள்…அரசின் அவலம்…!!
“எந்த உதவியும் யாரும் செய்யவில்லை” உணவு கிடைக்கவில்லை என வேதாரண்யம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயல் மந்த கதியில் கரையை நோக்கி நகர்ந்தது. புயல் உருவானபோது ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டதை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் சாதாரண புயலாக வலுவிழந்து கரையை கடக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தபடியே கரையை கடக்கும் நேரம் வரை எந்த சலனத்தையும் கஜா புயல் வெளிகாட்டவில்லை.
நாகை-வேதாரண்யம் இடையே 15-ந் தேதி(வியாழக்கிழமை) புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நாகை மாவட்ட பகுதிகளில் 15-ந் தேதி காலை முதல் மாலை வரை மழையே இல்லை. காற்றும் இல்லை. ஒருவித அமைதி நிலவியது. கரையை கடப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக நாகையில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவில் கரையை கடக்க தொடங்கியபோது புயலின் தீவிரத்தை நாகை மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சை, திருவாரூர் மாவட்ட மக்களும் உணர தொடங்கினார்கள். கடைசியில் கஜா புயல் மக்களை கதி கலங்க வைத்து விட்டு சென்று விட்டது.
புயல் கரையை கடக்க தொடங்கிய சில நிமிடங்களில் வீசிய சூறைக்காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேதாரண்யம் பகுதியில் பல மின்கம்பங்கள் சாய்ந்து விட்டன. செல்போன் கோபுரங்கள் உருக்குலைந்து கிடக்கின்றன. இந்த பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களின் நிலைமையோ மிகவும் பரிதாபமாக உள்ளது.
வேதாரண்யம் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட புயல் நிவாரண முகாம்கள் உள்ளன. இங்கு கிராம மக்கள் தங்க வைக்கப்பட்டு உணவு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் நிவாரண முகாம்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் முகாம்களில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எந்தெந்த முகாம்களில் உணவு பற்றாக்குறை உள்ளது? முகாம்களுக்கு புதிதாக வரும் மக்கள் எத்தனை பேர்? என கண்காணிப்பது அதிகாரிகளுக்கு மிகப்பெரிய சவாலான பணியாக உள்ளது.
செல்போன் கோபுரங்கள் பல இடங்களில் உருக்குலைந்து கிடப்பதால் செல்போன் உள்ளிட்ட தொலை தொடர்பு சாதனங்கள் முடங்கி உள்ளன. குறிப்பிட்ட நேர இடைவெளியில் செல்போன் சிக்னல் விட்டு, விட்டு கிடைக்கிறது. கணினிகளில், இணையதள சேவையை பயன்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக வங்கிகள் திறந்து இருந்தும் அங்கு இருந்து பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து பணம் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகிறார்கள். தனியார் வங்கிகளின் ஏ.டி.எம்.களில் மட்டுமே பணம் கிடைக்கிறது. அங்கும் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் பணம் கிடைக்கவில்லை என வேதாரண்யம் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் உணவு இல்லாமல் பரிதவிக்கும் அவல நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
புயலால் பாதிக்கப்பட்ட குப்பைக்காடு, செட்டிக்குளம், பனையர்காடு, சின்னபாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த
மக்கள், நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு உணவு இல்லாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டதால், தனது வீட்டில் இருந்து அரிசியை கொண்டு வந்து சமைத்து போடுவதாக, முகாமில் தங்கியுள்ள வயதான பெண் ஒருவர் தெரிவித்தார்.
dinasuvadu.com