உணவு பாதுகாப்பு ஆணையம் கடும் எச்சரிக்கை!ரூபாய் நோட்டுகளால் சுவாச கோளாறு உட்பட பல நோய்கள் உருவாகும்!
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ),ரூபாய் நோட்டுகள், நாணயங்களில் உள்ள நுண்கிருமிகள் தொற்றால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது.
இதுதொடர்பாக எஃப்எஸ்எஸ்ஏஐ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ரூபாய் நோட்டுகளை எண்ணும்போது எச்சிலை பயன்படுத்துதல், அழுக்கு படிந்த கைகளால் நுண்கிருமிகள் அவற்றில் தொற்றிக் கொள்கின்றன. இவ்வாறான நோட்டுகள், நாணயங்களை பயன்படுத்தும்போது உணவு நஞ்சாதல், வயிறு, சுவாச கோளாறுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, குழந்தைகள், கருவுற்ற பெண்கள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்கள் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
மேலும், உணவு வணிகர்கள், குறிப்பாக சாலையோரங்களில் கடை வைத்திருப்பவர்களில் பலர் பணத்தை பெற்றுக்கொள்ளும் கைகளாலேயே உணவை பரிமாறுகின்றனர். எனவே, உணவு பரிமாறுபவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. உணவு பரிமாறும் போது கையுறைகளை பயன்படுத்தலாம்.
ஒருவேளை ரூபாய் நோட்டுகள், நாணயங்களை பெற்றுக்கொள்ளும் கையால் உணவு பரிமாறினால் கைகளை நன்றாக கழுவிய பிறகே பரிமாற வேண்டும். இதுதொடர்பாக மக்களிடையே உணவு பாதுகாப்புத் துறையினர் வழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.