உணவுப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திருவள்ளூர் அருகே தீவிபத்து!
மன்னா என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான “ஹெல்த் ப்ரொடக்ட்ஸ்” தயாரிக்கும் தொழிற்சாலை திருவள்ளூர் மாவட்டம் உத்தண்டிகண்டிகை கிராமத்தில் இயங்கி வருகிறது. அரிசி, கோதுமை, மைதா உள்ளிட்ட மூலப் பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கான உணவு பொருட்கள், சத்து மாவு உள்ளிட்டவை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. அப்பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், தொழிற்சாலை கிடங்கில் இருந்து நள்ளிரவில் தீப்பிடித்ததைக் கண்ட காவலாளி, தொழிற்சாலை மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். தொழிற்சாலையில் உள்ள தீயணைப்பு கருவிகளைக் கொண்டு தீயை அணைக்க முயன்ற நிலையில், கிடங்கில் உள்ள அனைத்து பொருட்களும் தீப்பற்றி எரியத் தொடங்கின.நான்கு இடங்களில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக தொழிற்சாலையில் இருந்து கரும்புகை மேலே எழுந்தது.
6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் உணவுப் பொருட்களை தயாரிப்பதற்கான மூல பொருட்கள், பாக்கெட்டுகளில் இருந்த பொருட்கள், இயந்திரங்கள் என பத்து கோடி ருபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாயின. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.