உடலுறுப்பு பணத்துக்காக எடுக்கப்பட்டதா?சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,கேரள முதலமைச்சர் எழுதிய கடிதம் அடிப்படையில், சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனையில் பணத்துக்காக உடலுறுப்பு எடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் சென்னைக்குக் காரில் வந்தபோது மே 18ஆம் தேதி விபத்தில் சிக்கிக் காயமடைந்தார். சேலம் விநாயக மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் மூளைச்சாவு அடைந்ததாக மே 22ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் தெரிவித்துள்ளது.
மருத்துவக் கட்டணமாக மூன்றேகால் லட்ச ரூபாயும் கேட்டுள்ளது. பணமில்லை எனத் தெரிவித்ததால், உடலுறுப்புத் தானம் வழங்கியதாகத் தங்களிடம் கட்டாயமாகக் கையொப்பம் வாங்கியதாகவும், உறுப்புக்களை எடுத்த பின்னரே உடலை ஒப்படைத்ததாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் மணிகண்டனின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உடலுறுப்புகளை எடுத்த மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கரிடம், கேரள முதலமைச்சர் கடிதம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், டி.எம்.எஸ். எனப்படும் மருத்துவ சேவை இயக்குநர் தலைமையில், விசாரணை நடைபெற்று வருவதாகவும், தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால், தனியார் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.