ஈரோடு அருகே கிராம மக்கலின் புதிய முயற்சி!
குடிநீர் பிரச்சினையை போக்கும் வகையில் ஈரோடு அருகே புதிதாக குளம் அமைக்க, 41 விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த கிளாம்பாடி, பாம்பகவுண்டன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விவசாயத்தை பிரதானமாக கெண்டுள்ள இந்த கிராமங்களின் அருகே காவிரி ஆறும், காலிங்கராயன் வாய்க்காலும் செல்வதால் அந்த நீரை பாசனத்துக்கு பயன்படுத்தி விவசாயிகள், நெல்,கரும்பு,வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தனர். மேலும் கிராமமக்களின் குடிநீர் தேவையையும் அந்த நீரின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கடுமையான வறட்சியால், காவிரி ஆற்றிலும், காலிங்கராயன் வாய்க்காலிலும் நீர்வரத்து முற்றிலும் தடைபட்டது. இதனால் அந்த நீரை நம்பி பாசனம் பெற்று வந்த சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியதோடு, நிலத்தடி நீந்மட்டமும் குறைந்து கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.
இதனால் வேதனையடைந்த அப்பகுதி விவசாயிகள், குடிநீர் பஞ்சத்தை போக்க முடிவு செய்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் தங்களுக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.7 ஏக்கர் நிலத்தை ஊருக்கு தானமாக வழங்கினர். 3 செண்ட் முதல் 30 செண்ட் வரை 42 விவசாயிகள் வழங்கியுள்ள அந்த நிலத்தில், குளம் வெட்டும் பணியை தொடங்கியுள்ளனர் அக்கிராம மக்கள். சில தன்னார்வு அமைப்புகளின் நிதி உதவியுடன் 40 லட்சம் ரூபாய் செலவில் 10 அடி ஆழத்துக்கு குளம் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
குளம் வெட்டி வரும் பகுதியில் விவசாயிகள் எதிர்பார்த்தபடி காலிங்கராயன் வாய்க்கால் கசிவு நீரும், மழை காலத்தில் வரும் வெள்ள நீரும் தேங்கும் பட்சத்தில், தங்கள் பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி அடைவதுடன் , கிராமங்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியடையும் என நம்பிக்கையுடம் கூறுகின்றனர் அப்பகுதி விவசாயிகள்.
வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி என பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அரசின் உதவியை எதிர்பாராமல் புதிதாக ஒரு குளத்தையே உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எல்லோருக்கும் முன்மாதிரியாக உள்ளனர் என்றால் அது மிகையில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.