ஈரோடு அருகே ஆற்றின் குறுக்கே சட்டவிரோத தரைப்பாலம்!

Default Image

காவிரி ஆற்றின் குறுக்கே ஈரோடு அடுத்த கொடுமுடியில்  நடைபாதை அமைத்து சுங்க கட்டணம் வசூலித்த கும்பல் சிக்கி உள்ளது. தண்ணீருக்காக மாநிலமே போராடிவரும் நிலையில் அடாவடி வசூலுக்காக கல்லைக் கொட்டி காவிரியை  பிரித்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி…

காவிரி நீர் எப்போது திறக்கப்படும் என்ற ஏக்கத்தில் காத்திருக்கும் விவசாயிகள் ஒருபுறம்…! எப்படியும் தமிழகத்திற்கு காவிரியில் உரிய தண்ணிர் விரைவில் கிடைத்து விடும் என்ற நம்பும் ஆட்சியாளர்கள் மறுபுறம்..! என காவிரி நீருக்காக மாநிலமே காத்திருக்கும் வேலையில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஊஞ்சலூர் காவிரி ஆற்றின் பரிசல் துறையில் கல்லையும் மண்ணையும் கொட்டி நீண்ட தரைப்பாலம் அமைத்து சுங்க கட்டணம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொடுமுடியில் இருந்து நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், ஜேடர் பாளையம் ஆகிய ஊர்களுக்கு பேருந்தில் செல்ல வேண்டுமானால் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும். பேருந்துகள் இயக்கப்பட்டாலும், காவிரி ஆற்றை கடந்தால் விரைவாக அந்த ஊர்களுக்கு சென்று விட முடியும், என்பதால் பெரும்பாலான மக்கள் பரிசல் மூலமே ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்

தண்ணீர் வற்றினால் பரிசல் விடமுடியாது வசூல் பாதிக்கும் என்பதால் ரூ 6 லட்சத்துக்கு பரிசல் ஒப்பந்தம் எடுத்த அரசியல் பிரமுகர் ஒருவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு காவிரியின் குறுக்கே தரைப்பாலம் ஒன்றை அமைத்ததாக கூறப்படுகின்றது. காவிரி ஆற்றின் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே கற்களையும், மண்ணையும் கொட்டி அமைக்கப்பட்ட தரைப்பாலத்தில் நடந்து செல்பவர்களுக்கு கூட சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.

அந்த சட்டவிரோத தரைப்பாலத்தில் இரு சக்கர வாகனக்களுக்கு 10 ரூபாய் சுங்க கட்டணம் வசூலித்து வந்தனர். நான்கு சக்கர வாகனங்களும் அதிகம் பயணிக்க தொடங்கியதால் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும், அதிக பணம் வசூலிக்கும் திட்டத்துடனும் புதிதாக மேலும் ஒரு தரைப்பாலம் அமைக்க தொடங்கினார்.

பொக்லைன் எந்திரத்தின் உதவியால் பணிகள் நடந்து வந்ததை தொடர்ந்து இந்த சட்ட விரோத தரைப்பாலம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் குவிந்தது. இதையடுத்து செய்வதறியாது திகைத்த வருவாய் அதிகாரிகள் வேறு வழியின்றி அந்த தரைப்பாலத்தை பொக்லைன் எந்திரத்தால் அகற்றினர். இதனால் பாலத்தில் செல்லலாம் என்ற எண்ணத்தில் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் பரிசலில் செல்லும் நிலை ஏற்பட்டது

சட்டவிரோத தரைப்பாலம் அகற்றப்பட்டதால் தடைப்பட்டு நிற காவிரி நீரோட்டமும் சீரானது. பொக்கலைன் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் சட்டவிரோத பாலம் அமைத்த அந்த அரசியல் பிரமுகரை மட்டும் அதிகாரிகள் தப்பவிட்டுவிட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்கள் நலன் கருதி பயண நேரத்தை குறைக்கும் வகையில், இந்த பகுதியில் காவிரியின் குறுக்கே நிரந்தர பாலம் ஒன்றை அரசு அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்