இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மாத்திரைகள் கீழக்கரையில் பறிமுதல்..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக தங்கம், போதை பொருட்கள் போன்றவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது.
இதனை தடுக்க கியூ பிரிவு போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஆனாலும் அதையும் மீறி சமூக விரோதிகள் தொடர்ந்து கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கீழக்கரையில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படுவதாக ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தன.
எனவே கியூ பிரிவு மற்றும் கீழக்கரை போலீசார் நேற்று இரவு கீழக்கரை கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த 3 மர்ம நபர்கள் ஒரு விசைப்படகில் பெட்டிகளை ஏற்றினர். உடனே அங்கு பதுங்கி இருந்த போலீசார் மர்ம நபர்களை துரத்திச் சென்றனர். இதில் ஒருவர் மட்டும் பிடிபட மற்ற 2 பேர் தப்பினர்.
தொடர்ந்து படகில் ஏற்றியிருந்த பெட்டிகளை போலீசார் ஆய்வு செய்த போது அதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வலி நிவாரண மாத்திரைகள் இருப்பதும், இதனை இலங்கைக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்க உள்ளது தெரியவந்தது.
பிடிபட்டவர் கீழக்கரை அருகே உள்ள செங்கல் நீரோடையைச் சேர்ந்த இருளன் (வயது 45) ஆவார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிய 2 பேரை தேடி வருகின்றனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டது.