இரண்டே நாட்களில் லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு பயணம்!
சென்னையில் இருந்து மட்டும் இரண்டு நாட்களில் 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் இருந்து பயணிகள் சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில், போராட்டத்தை கைவிட்டு நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதால் பல்வேறு நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இதனிடையே, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார். பொங்கலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் பொங்கல் கொண்டாடுவதற்காக சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர் சென்றதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
source: dinasuvadu.com