இரண்டு மாணவர்கள் 2 வருடமாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளி!
அரசு தொடக்கப்பள்ளி தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தடங்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தோக்கம்பட்டியில் இயங்கி வருகிறது.
இந்த பள்ளி 1952-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுற்று வட்டார பகுதியான இந்திரா நகர், கற்கஞ்சிபுரம், அதியமான நகர், பெருமாள் கோவில் மேடு, தோக்கம்பட்டி ஆகிய 5 பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் இதுவரை 1264 பேர் பள்ளியில் படித்துள்ளனர். இந்த பள்ளியில் படித்த நிறைய மாணவர்கள் அரசு வேலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பல அரசு அதிகாரிகளை உருவாக்கிய இந்த சிறப்பு வாய்ந்த பள்ளி கடந்த 4 வருடமாக 4 மாணவர்களும், 3 ஆசிரியர்களுடன் இயங்கி வந்தது. தற்போது கடந்த 2 வருடமாக 2 மாணவர்கள், ஒரு தலைமை ஆசிரியருடன் பள்ளி இயங்கி வருகிறது. தலைமை ஆசிரியரே வகுப்பு ஆசிரியராகவும் இருந்து வருகிறார்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
அனைத்து பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் இந்த தொடக்கப்பள்ளியில் தான் படித்து வந்தனர். தடங்கத்தில் புதியதாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டதால் நிறைய மாணவர்கள் அந்த பள்ளிக்கு சென்றுவிட்டனர்.
இந்த பள்ளி பழைய கட்டிடத்தில் இயங்குவதாலும், தரம் உயர்த்தப்படாமல் தொடக்கப் பள்ளியாகவே இருப்பதாலும் பெற்றோர்கள் மாணவர்களை இந்த பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். அதனால் இந்த பள்ளிக்கு மாவட்ட நிர்வாகம் கான்கிரீட் கட்டிடம் அமைத்து தர வேண்டும். மாணவர்களுக்கு விடுதி வசதியுடன் அரசு அமைத்து கொடுத்தால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு கண்டிப்பாக அனுப்பி வைப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.