இரண்டாவது விமான நிலையம் மதுராந்தகம் அடுத்த செய்யூரில் அமைய வாய்ப்பு?
தமிழக அரசு சென்னைக்கு அடுத்ததாக, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். நிலம் அளவீடு தொடர்பான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனையம் என 2 முனையங்கள் உள்ளன. தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு, 2-வது ஓடுதளம் அமைக்கப்பட்டதுடன், புதுப்பிக்கப்பட்டது. இருப்பினும், விமான சேவைகள் அதிகரிப்பு, சரக்கு கையாள்வதில் உள்ள சிக்கல்கள் போன்றவற்றால், புதிய விமான நிலையம் அமைக்கவேண்டிய கட்டாயத்தில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் உள்ளது.
இதனால், மீனம்பாக்கத்தை ஒட்டியுள்ள பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல் பஜார் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை அகற்றிவிட்டு, விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இத்திட்டம் கைவிடப்பட்டது.
இதன்பிறகு, மதுராந்தகம், உத்திரமேரூர் பகுதிகளில் 1,200 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. பல்வேறு சிக்கல்களால் அதுவும் கைவிடப்பட்டது. பின்னர், ஸ்ரீபெரும்புதூரில் கிரீன்ஃபீல்டு விமான நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. தமிழக அரசும் இதற்கான நிலத்தை கையகப்படுத்தி அளித்தது. ஆனால், துண்டு துண்டாக 900 ஏக்கர் மட்டுமே கிடைத்ததால் விமான நிலைய ஆணையத்தால் அந்த இடத்தைப் பயன்படுத்த முடியவில்லை. இதனால், அந்தத் திட்டமும் கைவிடப் பட்டது.
தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 1,250 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. போக்குவரத்து சிக்கல்கள் இருந்ததால், அதுவும் தேர்வு நிலையிலேயே வைக்கப்பட்டது.
இந்நிலையில், விமான நிலையத்துக்காக மதுராந்தகம் அடுத்த செய்யூர் தாலுகாவில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் சமீபத்தில் தேர்வு செய்துள்ளனர். இதில் 3 பெரிய கிராமங்கள் மற்றும் சில குக்கிராமங்களைச் சேர்ந்த பகுதிகள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக, செய்யூர் வட்டத்தில் உள்ள அறப்பேடு, அயன்குன்னம் மற்றும் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள தொழுப்பேடு பகுதிகள் இதில் இடம்பெறுவதாக வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதல்கட்டமாக, தனி நபர் பட்டா மற்றும் அரசு நிலங்கள் நிறைந்துள்ள இந்த நிலத்தை அளவிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக சர்வே எண்கள் அடங்கிய தகவல் தொகுப்பு, மாவட்ட வருவாய்த் துறையினரிடம் வழங்கப்பட்டுள் ளது.
8 ஆயிரம் ஏக்கர்
அதே நேரம், விமான நிலையத்துக்கு 5 ஆயிரம் ஏக்கர், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றுக்காக 3 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தால் மட்டுமே விமான நிலையங்கள் ஆணையத்தால் பணிகளைத் தொடங்க முடியும். எனவே, மாநில அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இடத்துக்கு விமான நிலையங்கள் ஆணையம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகே, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய சென்னை மாவட்ட எல்லைக்குள் ஒரே இடத்தில் போதிய இடம் கிடைக்கவில்லை. அதனால், சென்னையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள செய்யூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு விமான நிலையம் அமைத்தால், செய்யூரில் இருந்து சென்னைக்கு செல்லும் பயண நேரம் குறையும். சாலை மார்க்கமாக சென்னைக்கு 2 மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்பதையும் கணக்கில் கொண்டே, இங்கு இடம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பயண நேரத்தைக் குறைக்க, பிரத்யேக சாலை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.