இன்று உலக தேனீ தினம்..
உலக தேனீ தினமான இன்று, தேனீக்களின் அவசியம் பற்றியும், மனித குலத்திற்கு அது செய்யும் சேவை பற்றியும் தெரிந்துகொள்ளலாம் இந்த செய்தித் தொகுப்பில். சுறுசுறுப்பு, தேடல், கூட்டு முயற்சி என தன்னுடைய வாழ்க்கைமுறையின் மூலம் மனிதர்களுக்கு பாடம் சொல்லும் தேனீ, சிறுபூச்சி இனத்தைச் சேர்ந்தது.
ஆண்டுக்கு 1 லட்சம் கி.மீ தூரம் பயணித்து தன்னுடைய உணவுத் தேவைக்காக தேனீ பூக்களில் இருந்து தேனை எடுக்கிறது என்றாலும், அதன் மூலம் அதிகம் பயனடைவது என்னவோ மனிதகுலம்தான். தேன் மூலம், ஒவ்வொரு நாடும், பல கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்ட உதவுவதோடு, அது மருத்துவ பொருளாகவும் திகழ்கிறது.
பூக்களிலிருந்து தேனை எடுக்கும் நேரத்தில் அவற்றின் காலில் ஒட்டிக்கொள்ளும் மகரந்தம், வெவ்வேறு பூக்களில் மாறி மாறி அமரும்போது, பரவுவதால் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. இதனால் பூக்கள் மலர, பூகோளமும் மகிழ்கிறது.
அந்த வகையில் தேனீ பசுமையின் பாதுகாவலனாகவும் திகழ்கிறது. இப்படி மனித குலத்தின் நண்பனான தேனீ, தற்போது அழிந்து வரும் உயிரினமாக மாறிவருவதற்கு நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் , செயற்கை உரங்கள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் காரணமாகிக்கொண்டிருக்கின்றன.
இங்கு உணவு இருக்கிறது என்று நடன அசைவின் மூலம், தன் இனத்திற்கு தெரியப்படுத்தும் தேனீ, உணவுச் சங்கிலியில் பெரும்பங்கு வகிக்கும் நிலையில், அவற்றை நாம் காப்பாற்ற கடமைப்பட்டிருக்கிறோம்.