இனி யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது!முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி,நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின் போது ஜல்லிக்கட்டுப் போல ஸ்டெர்லைட் விவகாரத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அப்போது ஸ்டெர்லைட் ஆலை சார்பாக அளிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் எங்கே என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக பேரவையில் பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்ட வல்லுநர்கள், மூத்த அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்தே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்பட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், நிலம் வழங்கும் ஆணை உள்ளிட்ட அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். ஜனநாயக ரீதியாக போராட மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகளே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.