இனி தனியார்,சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வீட்டுபாடம் கொடுக்காதீர்! உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம்,தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள், ஒன்று, இரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் கொடுக்க கூடாது என உத்தரவிட்டிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின்படி கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுவதுபோல், தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் பயிற்றுவிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், கடந்த ஏப்ரல் மாதம் என்சிஇஆர்டி செயலாளர் மேஜர் ஹரீஷ்குமார் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒவ்வொரு குழந்தையும், எவ்வளவு நேரம் படிக்க வேண்டும், அவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்பதையும் கணித்து தந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஒன்று மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என்றும், 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை, வாரத்திற்கு மொத்தமாக 2 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் அளவில் வீட்டுப்பாடம் கொடுக்க அறிவுறுத்தியிருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, என்சிஇஆர்டி செயலாளரின் பதில் மனுவை ஏற்பதாக தெரிவித்தார். என்சிஇஆர்டி விதிகளை அனைத்து தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில், என்சிஇஆர்டி விதிகளின் படி பாடத்திட்டம் தான் கற்பிக்கப்படுகிறதா என்பதை சிபிஎஸ்இ அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், விதிகளை மீறும் பள்ளிகளின் அங்கீகாரங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், என்சிஇஆர்டி விதிகளின்படி, ஒன்று மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என்றும் நீதிபதி கிருபாகரன் ஆணையிட்டார். இந்த உத்தரவு நகல்களை, அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்குக்கும் அனுப்ப வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.