இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று அவர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமாஸ்கந்தர், ஏல்வார்குழலி சிலைகள் சேதமடைந்ததால், அதற்கு பதிலாக புதிய சிலை செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக அண்ணாமலை என்பவர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் தலைமை ஸ்தபதி முத்தையா, செயல் அலுவலர் முருகேசன், சிலை செய்த மாசிலாமணி உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்தது.
இதேபுகாரில் இந்து சமய அறநிலையத்துறை திருப்பணி பிரிவு கூடுதல் ஆணையர் கவிதாவை ஜூலை 31-ம் தேதி கைது செய்த நிலையில், அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி நிபந்தனை ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ள கவிதா அறநிலையத்துறை பணிகளில் மறைமுகமாக ஈடுபடுவதாகவும், அதனால் அவரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசுக்கும், இந்துசமய அறநிலையத்துறைக்கும் உத்தரவிட வேண்டுமென இன்று நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் புகார்தாரர் யானை ராஜேந்திரன் கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து அறநிலையத்துறை விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் இன்று திடீரென கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
DINASUVADU