இந்தி எதிர்ப்பு போராட்டம் கல்லூரி மாணவராக இருந்தபோது பங்கேற்றவர் ம.நடராஜன்!
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ம.நடராஜன், கல்லூரி மாணவராக இருந்தபோது பங்கேற்றவர் ஆவார்.
தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் 1943ஆம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். மாணவர் பருவத்திலேயே தமிழ்மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், இந்தியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். 1965ம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, தஞ்சையில் கல்லூரி மாணவர்களைத் திரட்டி நடராஜன் போராட்டம் நடத்தினார்.
இதன்மூலம், அறிஞர் அண்ணாவின் கவனத்தை ஈர்த்தார்.பின்னர், 1967ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது தமிழக அரசின் மக்கள் தொடர்புத் துறையில் அவர் பணியாற்றினார். 1975ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடராஜன்- சசிகலா திருமணம் நடைபெற்றது.
1980களில் தென்னாற்காடு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சந்திரலேகா மூலம், ஜெயலலிதாவுடன் நடராஜனுக்கும், சசிகலாவுக்கும் அறிமுகம் கிடைத்தது. பல ஆண்டுகளாக புதிய பார்வை பத்திரிகையை நடத்தி வந்த நடராஜன், பல்வேறு பொதுநிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.
ஆண்டுதோறும் பொங்கலையொட்டி, தமிழர் கலை இலக்கிய விழாவை அவர் நடத்தி வந்தார். அதில் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு, உயிருக்கு நேர், அண்ணாவின் சொற்பொழிவுகள், உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் அவர் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கைப் போர் குறித்த புத்தகத்தை எழுதியுள்ள நடராஜன், அங்கு உயிரிழந்தோர் நினைவாக, முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற பெயரில் நினைவுமண்டபம் அமைவதற்கு பெரிதும் பாடுபட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.