இதை அனுப்பியது ஒரு குற்றமா?ஸ்மைலி அனுப்பியதால் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!கலக்கத்தில் ஊழியர்கள்
உயர் அதிகாரியின் முக்கிய ‘மெசேஜ்’-க்கு வாட்ஸ் ஆப் குழுவில் ஊழியர்கள் கண்ணில் தண்ணீர் வரும் ஸ்மைலியை அனுப்பியதால், அவர்கள் மீது காவல்துறை 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
தூத்துக்குடியில் உள்ள பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் கோட்ட பொறியாளர் விஜயலட்சுமி என்பவர், அலுவலக தகவல்களை பரிமாறும் வாட்ஸ் ஆப் குழுவில் தனது கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதற்கு ஊழியர்கள் பதிலளிக்கும் வகையில் கண்ணில் தண்ணீர் வரும் ஸ்மைலியை (‘Laughing Emojis‘) அனுப்பியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத விஜயலட்சுமி கோபமடைந்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
ஊழியர்களின் இந்த நடவடிக்கையால் தாம் வெகுவாக பாதிக்கப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனால் வாட்ஸ் ஆப் குழுவில் ‘சிரிக்கும் ஸ்மைலி’ அனுப்பிய 46 ஊழியர்கள் மீது பெண்கள் மீதான துன்புறுத்தல் தடுப்புச்சட்டம், எஸ்சி / எஸ்டி சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இதனை அறிந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் தங்கள் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். சுந்தர், எந்த ஒரு கருத்துக்கும் பதில் கருத்து கூற அனைவருக்கும் உரிமையுள்ளதாகவும், ஆனால் சிரிக்கும் ஸ்மைலியால் எதிர்தரப்பினர் பாதிக்கப்பட்டது கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இது தண்டனைக்குரிய குற்றமாகாது என 46 பேர் மீது பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 46 பேரும் எழுத்து மூலம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.