ஆளும் கட்சிக்காக கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதா? பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவையில் விவாத நிகழ்ச்சி நடத்திய புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் செய்தியாளர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதைக் கண்டித்தும், பொய்வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் திங்களன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர் விஜயன் தலைமை வகித்தார். இதில் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்தும், புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் செய்தியாளர் மீது பிணையில் வர முடியாதபடி வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும் பத்திரிகையாளர்கள் கோபாவேச முழக்கம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து நியூஸ் 7 செய்தியாளர் கதிர்வேல், தீக்கதிர் செய்தியாளர் வே.தூயவன் ஆகியோர் உரையாற்றினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.