ஆளுநருக்கு ரூட் போட்டு கொடுத்த தினகரன்!கண்டிப்பா நீங்களே சீக்கிரம் டெல்லி போவீங்க !

Default Image

ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன், ஆளுநர் பதவிக்கான மாண்பை காப்பாற்ற ஆளுநர் தாமாகவே டெல்லி திரும்பிட வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “கடந்த செவ்வாய்க்கிழமை ஆளுநர் மாளிகையின் தர்பார் அரங்கில் தன்னுடைய தர்பாரை ஆளுநர் நடத்தியுள்ளார். இந்த தர்பார் வேலையெல்லாம் தமிழகத்தில் எடுபடாது.

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல முயற்சித்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வழிகாட்டும் ஆசான் ஸ்தானத்தில் இருப்பவரே மாணவிகளை தவறாக வழி நடத்தும் செயல் என்பது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் நிர்மலா தேவியின் தொலைபேசி உரையாடலில் ஆளுநர் அளவிலானவர்கள் என்று கூறுவதால், இப்பிரச்சனையின் ஆழம் என்னவென்று தெரிகிறது.

இந்நிலையில், ஆளுநரின் அளவுக்கதிகமான பதட்டமும், அதனைத் தொடர்ந்து விசாரணை ஆணைய அறிவிப்பும், பேட்டியும், பேட்டியின் முடிவில் அவர் நடந்துக்கொண்ட விதமும் என இவை எதுவுமே முறையானதாக, நெறியானதாகத் தோன்றவில்லை.

ஆளுநர் தன் எல்லைகளை அளவுக்கதிகமாகவே மீறிக் கொண்டிருக்கிறார். நிர்மலா தேவியின் தொலைபேசி பேச்சு என்பது மிகத் தெளிவாக, குற்ற நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டிய ஒன்று என்பதை உணர்த்துகிறது.

இதற்கு குற்ற விசாரணையை மேற்கொண்டு உரிய தண்டனையை பெற்றுத்தரவேண்டும். இப்பிரச்சனையில் பெரும் செல்வாக்கு படைத்தவர்கள் திரைமறைவில் இருப்பதை தெளிவாக அறியமுடிகிற காரணத்தால்தான் இதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றும், அல்லது நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் உள்ள ஓர் விசாரணை அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தவேண்டும் என்றும் நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.

இந்நிலையில், ஆளுநரின் வரம்பு மீறிய செயல் என்பது மிகத் தவறான முன்னுதாரணத்தை தான் ஏற்படுத்துகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விசாரணை அமைப்புகளே நம்ப தகுந்தது அல்ல என்ற கருத்து நிலவிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஆளுநரின் ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது நம்பிக்கை உடையதாக இருக்குமா? அல்லது இது என்ன சாதிக்கப்போகிறது? மேலும், இது சுயாட்சித் தத்துவத்தை நசுக்குவதாகும்.

அதுவும் தனது பேட்டியின் முடிவில் பெண் பத்திரிக்கையாளரிடம் ஆளுநர் தன் மாண்பை மீறி நடந்து கொண்ட விதம் கடும் கண்டனத்திற்குறியது. இதுபோன்று தனிப்பட்ட நடவடிக்கைகளிலும், மாநில அதிகாரத்திலும் எல்லை மீறி அவர் நடந்துகொள்ளும் விதமும் ஆட்சேபத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதாகும். ஆளுநர் பதவிக்கான மாண்பை காப்பற்ற தமிழக ஆளுநர் தாமாகவே டெல்லி திரும்பிடவேண்டும்.

பழனிசாமியின் அரசு ஆளுநர் மீதும், மத்திய அரசின் மீதும் கொண்டிருக்கின்ற அளவு கடந்த பயம் தொடரும்வரை தமிழகத்திற்கு பின்னடைவையும் தலைகுனிவையும்தான் ஏற்படுத்துகிறது” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்