அரசு பணியாளர் தேர்வாணைய கேள்வித்தாள்கள் மாயம் தனியார் பயிற்சி மையத்தின் கைவரிசை..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குருப் 1 தேர்வின்போது பயன்படுத்தப்படாத 67 கேள்வித்தாள் மாயமானது குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் மாநில காவல்துறையின் குற்ற புலனாய்வு பிரிவினர் (சிசிபி) ஏற்கனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நான்கு அதிகாரிகள் உள்பட ஐந்துபேரை கைது செய்துள்ளனர். இதில் காசிராம் குமார் என்பரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் தேர்வுத்தாள் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே விசாரணை வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அப்பல்லோ ஸ்டடிசென்டரின் முன்னாள் ஊழியர் என்பது தெரியவந்தது. தேர்வு நடத்தப்பட்ட 74 இடங்களுக்கு அப்பல்லோ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 62 பேர் தேர்வாகியுள்ளது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்றவர்களின் பெயர்கள் இதுவரை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை.
காவல்துறையினர் கைது செய்துள்ள அரசு பணியாளர் தேர்வாணைய நான்கு அதிகாரிகள் தவிர்த்து விண்ணப்பதாரர் ராம்குமார், அவரது நண்பர் குமரேசன் மற்றும் புரோக்கர் பவுல்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள இதர குற்றவாளிகள் ஆவர். இவர்கள் மூவரும் மதுரையை சேர்ந்தவர்கள். இந்த வழக்கில் அப்பல்லோ பயிற்சி மையத்தின் இயக்குநர் சாம் ராஜேஸ்வரனுக்கு சென்னை பெருநகர கூடுதல் அமர்வுநீதிமன்ற விடுமுறைக்கால நீதிபதி எஸ்.புருஷோத்தமன் முன்ஜாமீன் வழங்கியுள்ளபோதிலும் அவர் நாட்டை விட்டுச் செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை முத்தஅதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராஜேஸ்வரன்தான் இந்த வழக்கில் முக்கிய சூத்திரதாரி என்பதால் அவருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனைதள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தை விரைவில் நாடவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
ராஜேஸ்வரனின் மொபைல் போனை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் அவருக்கு வந்துள்ள அழைப்புகள் மற்றும் அவர் யார் யாரிடம் பேசியுள்ளார் என்பது குறித்து ஆய்வு செய்த பின்னரே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் நான்குபேர் கைது செய்யப்பட்டனர். கடந்தாண்டு நடைபெற்ற தேர்வுக்கான கேள்வித்தாள்களை தயாரித்து தந்த நிபுணர்களிடமும் இவர் தொடர்பு வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கேள்வித்தாள் மட்டுமல்ல விடைத்தாள்களை திருத்தம் செய்வதற்கு முன்பு அதில் சில மாற்றங்களை செய்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.