அரசு பணிக்கு இந்தி கட்டாயமா? திணிப்பு முயற்சியை கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்..!

Published by
Dinasuvadu desk

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆசிரியர்கள் அல்லாத பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அடிப்படை இந்தி அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “நாடு முழுவதும் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆசிரியர்கள் அல்லாத பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அடிப்படை இந்தி அறிவைப் பெற்றிருக்க வேண்டும்; இந்தி தெரியாதவர்களுக்கு வேலை வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பிற மொழிகளை அழித்து விட்டு, இந்தியை ஊக்குவிப்பதற்கான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

கொல்கத்தாவிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு துணைப் பதிவாளர், உதவிப் பதிவாளர், செயற்பொறியாளர் உள்ளிட்ட 20 பதவிகளுக்கான ஆள்தேர்வு விளம்பர அறிவிப்பில் இந்நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் நாட்டின் தேசிய மொழியான இந்தியை அறிந்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

திருவனந்தபுரம், திருப்பதி, புனே, போபால், பெர்ஹாம்பூர், மொஹாலி ஆகிய இடங்களிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் இவ்விதி பொருந்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி கூறியதாக நாளிதழ் ஒன்று (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய நிலைப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எந்த ஒரு அரசு பணிக்கும் அந்த பணியை செய்வதற்கு தேவையான தகுதி மட்டுமே நிர்ணயிக்கப்பட வேண்டும். உதாரணமாக செயற்பொறியாளர் பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பும் அனுபவமும் போதுமானவையாகும். அவ்வாறு இருக்கும் போது இந்தி மொழி அறிவு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருப்பது இந்தியை திணிக்கும் முயற்சி என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.

அதிலும் குறிப்பாக, போபால் தவிர இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களும் இந்தி பேசாத மாநிலங்கள் ஆகும். அங்கு பணியாற்ற இந்தி மொழி அறிவு தேவையில்லை எனும் போது இந்தி அறிவை வேலைவாய்ப்புக்கான தகுதியாக மத்திய அரசு அறிவிப்பது எந்த வகையில் நியாயம்

எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் பணியாற்ற விரும்புபவர்கள் உள்ளூர் மொழியை அறிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்தி பேசும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் வங்கிப் பணியில் சேர இது தடையாக இருப்பதாக கருதிய மத்திய ஆட்சியாளர்கள், ஓசையின்றி அந்த நிபந்தனையை நீக்கி விட்டனர். அதனால் தமிழகத்திலுள்ள வங்கிகளில் தமிழே தெரியாத இந்தி பேசும் வட இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களால் கிராமப்புற மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை உள்வாங்கி, அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

ஒரு மாநிலத்தில் மக்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் பணியில் உள்ளவர்கள் உள்ளூர் மொழியை அறிந்திருக்க வேண்டியது அவசியத் தேவையாகும். ஆனால், அதை ஏற்க மறுக்கும் மத்திய அரசு, எந்த வகையிலும் பணிக்கும், மக்களுடன் தொடர்பு கொள்ளவும் தேவைப்படாத இந்தி மொழியை கட்டாயமாக்குவது பின்னணியில் தான் மிகப்பெரிய சதி உள்ளது.

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனப் பணிகளுக்கு இந்தியை கட்டாயமாக்கியுள்ள மத்திய அரசு, அடுத்தக்கட்டமாக ஐஐடி, ஐஐஎம், மத்தியப் பல்கலைக்கழகங்கள் என அனைத்து மத்திய அரசு நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த தீர்மானித்துள்ளது. அவ்வாறு விரிவுபடுத்தப்படும் போது மத்திய அரசு பணிகளில் சேர இந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். இதனால் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்தியை கற்றுக் கொள்ளத் தொடங்குவார்கள். இதன்மூலம் இந்தியை நாடு முழுவதும் பரப்பலாம் என்பது தான் இதன் பின்னணியிலுள்ள திட்டமாகும்

2014 ஆம் ஆண்டு மத்தியில் பதவியேற்ற நாளில் இருந்து இந்தியைத் திணிப்பதற்காக ஏராளமான முயற்சிகளை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, அவை அனைத்தும் தோல்வியடைந்துவிட்ட நிலையில் இந்த புதியத் திட்டத்தை திணிக்க முயல்கிறது. 55 ஆண்டுகளுக்கு முன் ஜவஹர்லால் நேரு அளித்த உறுதிமொழிக்கு மாறாக, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிப்பது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும். எனவே, இந்தி அறிவு தேவைப்படாத எந்த பணிக்கும் அதை கட்டாயம் என்று அறிவிக்கக்கூடாது. கொல்கத்தா இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான ஆள் தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற்று புதிய அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Recent Posts

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

13 minutes ago

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

39 minutes ago

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

1 hour ago

“ஹிந்தி தேசிய மொழி இல்லை…அஸ்வின் சொன்னது சரி தான்” – அண்ணாமலை!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…

2 hours ago

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

10 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

11 hours ago