அமலாக்கத்துறை குட்கா ஊழல் விவகாரத்தில் வழக்குப்பதிவு!
சி.பி.ஐ.யை தொடர்ந்து அமலாக்கத்துறையும் குட்கா ஊழல் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் குட்கா புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா தயாரிப்பு ஆலைகள் இயங்க அனுமதிப்பதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் மாதவரத்தில் உள்ள குடோனில் போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்திய போது, மூட்டை, மூட்டையாக பான், மாவா போன்ற குட்கா பொருட்கள் சிக்கியது.
குட்கா தயாரிப்பு நிறுவனம் ரூ.250 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கினார்கள். அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள அமைச்சர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் டைரி ஒன்று சிக்கியது. அதில் குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை கமிஷனராக இருந்த எஸ்.ஜார்ஜ் உள்பட அதிகாரிகள் பெயரும் இடம் பெற்றிருந்தது.
குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பனார்ஜி தலைமையிலான அமர்வு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
எனினும் சி.பி.ஐ. சார்பில் வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை இயக்குனர் அலுவலகத்துக்கு கடிதம் மூலமும், சென்னையில் உள்ள சி.பி.ஐ. அதிகாரி அலுவலகத்துக்கு நேரில் சென்றும் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினார். அதன்பேரில் சி.பி.ஐ. சார்பில் பெயர் குறிப்பிடாமல் கலால் வரித்துறை, உணவு பாதுகாப்புத்துறை, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் குட்கா ஊழல் வழக்கில் சட்டவிரோத பணி பரிவர்த்தனை தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குப்பதிவிலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.
குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் தனித்தனியாக விரைவில் விசாரணையை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.