அப்போம் ஆளுநர் தேவை இல்லை…!இப்பம் மட்டும் ஆளுநர் தேவையா ? அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார், ஆளுநரே வேண்டாம் என்று கூறும் திமுகவினர் பிரதமரை சந்திக்க உதவி கேட்பது சந்தர்ப்பவாதம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
காவிரி மேலாண்மை விவகாரத்தில் குறித்த காலத்தில் அமைக்காமல் தற்போது மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு மத்திய அரசு அப்பீலுக்கு சென்றதில் தமிழகமே கொந்தளித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், மாணவர் இளைஞர் அமைப்புகள், வியாபார சங்கங்கள், தமிழர் அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன.
அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டபோது பிரதமர் சந்திக்கவில்லை. இந்நிலையில் தமிழகம் வந்த பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது. இதே போல் ஆளுநரின் ஆய்வை எதிர்த்து திமுக சார்பில் கருப்புக் கொடி காட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆளுநரை சந்தித்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரை சந்திக்க உதவிடும்படி கேட்டுக்கொண்டனர். இதை சந்தர்ப்பவாதம் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், “ஆளுநரே தேவையில்லை, வேண்டாம், அவர் எப்படி ஆய்வு நடத்தலாம் ஆளுநர் அவசியமில்லை என்று கூறுபவர்கள், இன்று ஆளுநரை சந்திப்பது எந்த அளவுக்கு சந்தர்ப்பவாதம் என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடி தீர்மானம் போடுபவர்கள் கர்நாடக அரசை எதிர்த்து ஏன் தீர்மானம் போடவில்லை?” என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக இதே கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பியபோது “மாநில சுயாட்சி என்ற எங்களுடைய கொள்கையின் அடிப்படையில் நாங்கள் போராடுகிறோம். இப்போதல்ல, எப்போதும் அதை வலியுறுத்துவோம். ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டில் அரசு செயல்பட முடியாத நிலையில் இருக்கின்ற காரணத்தால், மத்திய அரசின் பிரதிநிதியாக இங்கிருக்கும் ஆளுநரிடம் இந்தப் பிரச்சினைகள் குறித்து சொல்லியிருக்கிறோம்” என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.