அதிர்ச்சி …1020 பேருக்கு பன்றிக்காய்ச்சல்…சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி…!!

Default Image

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை பன்றிக்காய்ச்சலுக்கு 1020 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். 

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு பலர் இறந்துள்ளனர். இதை தடுக்கும் நோக்கில் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்தும், பஸ் ஆட்டோக்களில் நோய் தடுப்பு மருந்து தெளித்தும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அக்டோபர் மாதத்தில் காய்ச்சல் நோய் அதிகமாக இருந்தது. போர்க்கால அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை படிப்படியாக குறைந்துள்ளது. பெரும்பாலும் இந்த காலங்களில் ஏற்படும் காய்ச்சலால் மக்கள் பீதி அடைய வேண்டாம். காய்ச்சல் வந்தவுடன் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். போலி டாக்டர்களிடம் செல்லக் கூடாது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத்துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு கட்டமாக பன்றிக்காய்ச்சலை தடுக்க பொதுமக்களுக்கு கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் நோய் தடுப்பு மருந்தான ‘லைசால்’ வைத்து பொதுமக்கள் அதிகம் செல்லும் இடங்களான சினிமா தியேட்டர், திருமண மண்டபம் பஸ், ஆட்டோக்களில் மருந்து தெளிக்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் 416 பெரிய வாகனங்கள், 710 சிறிய வாகனங்களில் நடமாடும் முகாம், 1,700 காய்ச்சல் முகாம்கள் அமைத்து நோயை கட்டுப்படுத்தி வருகிறோம். அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டு காலதாமதமாக வரக்கூடாது. மக்கள் கூடும் இடங்களில் ‘லைசால்’ மருந்து தெளிப்பதால் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பன்றிக்காய்ச்சலால் கடந்த ஆண்டு 3,800 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு 17 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 1,020 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு 17 பேர் இறந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் 12 பேர் இறந்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் 259 பேர் பலியாகி உள்ளனர். இந்தியா முழுவதும் 8,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது நோக்கம் இறப்பை தடுப்பது தான். பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் டாமி புளு மாத்திரைகள் 19.75 லட்சம் இருப்பில் உள்ளது.

ஆஸ்துமா, உடல் பருமன் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கடந்த வாரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உள் மற்றும் புற நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கடந்த 5 நாட்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கூடுதல் மருத்துவ வசதிகள் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் 35 சதவீதம் குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்