அதிமுக கோட்டையாக உள்ள இப்பகுதிகளை அசைத்துப் பார்க்க திமுக தீவிரம்!
அதிமுகவினர் வசம் உள்ள காங்கேயம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்றும் முயற்சியில் திமுக எம்எல்ஏக்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் வருகின்ற பிப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.இதனால்,அரசியல் கட்சிகள் வாக்குச் சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில்,திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம்,வெள்ளகோவில் நகராட்சிகள்,மூலனுார் பேரூராட்சி ஆகியவற்றை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் காங்கயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும்,தமிழக செய்தித்துறை அமைச்சருமான சாமிநாதன் ஈடுபட்டு வருகிறார்.
ஏனெனில்,கடந்த, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், காங்கயம்,வெள்ளகோவில் நகராட்சிகள்,மூலனுார் பேரூராட்சி ஆகிய மூன்றிலும் அதிமுகவினரே வெற்றி பெற்று,இப்பகுதிகளை தங்கள் வசம் வைத்துள்ளனர்.
இந்த நிலையில்,தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால்,இந்த மூன்று பகுதிகளையும் எப்படியாவது கைபற்றிட வேண்டும் என்ற முனைப்பில் அமைச்சர் சாமிநாதன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும்,தாராபுரம் நகராட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சியில் அத்தொகுதி எம்.எல்.ஏ.வும்,தமிழக ஆதி திராவிட நலத்துறை அமைச்சருமான கயல்விழி அவர்கள் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளார்.
ஆனால்,மறுபுறம் இவ்விரு தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி,பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில்,தங்கள் ஆதரவாளர்களுடன் அதிமுகவினர் ஓட்டு சேகரிப்பு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.எனினும்,தேர்தலுக்கு பின்னரே இந்த தொகுதி அதிமுக வசமே நீடிக்குமா அல்லது திமுக கைப்பற்றுமா என்பது தெரிய வரும்.