அதிமுகவில் அம்மா …!திமுகவில் அப்பா …!ஓ.பன்னீர்செல்வம் வழியில் மு.க.அழகிரி…!தர்மயுத்தம் திமுக வெர்சன்
அதிமுகவில் தர்ம யுத்தம் நடைபெற்றது போல், திமுகவிலும் தர்ம யுத்தம் நடைபெறும் நிலையில் உள்ளது.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தனது மனசாட்சி கேள்வி எழுப்பியதால்தான் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததாகவும், அவர் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் பரபரப்பு தகவல்களைதெரிவித்தார்.
பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.இதே பாணியில் திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் ,திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 27 ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்மந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .
பின் கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.ஆகஸ்ட் 8 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் நினைவு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அங்கு பல்வேறு முக்கிய தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் 14ஆம் தேதி (அதாவது நாளை) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
தற்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த நிலையில் அந்த தலைமை பதவி காலியாக உள்ளது.ஏற்கனவே மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் மு.க. அழகிரி கருணாநிதி மறைவைத் தொடர்ந்து சாந்தமாகக் காட்சி அளிக்கும் அவருக்கு கட்சியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வியை அவரது ஆதரவாளர்கள் முன் வைத்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் அழகிரி கூறுகையில்,கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.நான் திமுகவில் இல்லை, செயற்குழு குறித்து எதுவும் கூற முடியாது.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன்.எனது ஆதங்கம் என்ன என்பதை பின்னர் அனைவரும் அறிந்து கொள்வீர்கள் என்று அதிரடியாக தெரிவித்தார்.
இது கிட்டதட்ட அதிமுகவில் கடந்த முறை ஒரு தர்மயுத்தம் தொடங்கியதை போல இப்பொழுது திமுகவில் ஒரு தர்மயுத்தம் தொடங்கியுள்ளது.இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU