அதிகபட்சம் 13 லட்சம் ரூபாய் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு ஆண்டுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் ! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம்,நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில், எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 13 லட்சம் ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவஹர் சண்முகம் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதில், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் இளங்கலை மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களிடம் வசூலிப்பதாக அவர் முறையிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஏற்கனவே குழு அமைக்கப்பட்டிருப்பதை தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். அந்தக் குழு விரைவில் கட்டண நிர்ணயத்தை முடிவு செய்து அறிவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ஆண்டுக்கு அதிக பட்சமாக 13 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.