நகை கடை நடத்துபவர்களும் அட்சய திருதியை அன்று நகை வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருவதால் அன்றைய தினம் தங்க நகைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
சென்னையில் நகைக் கடைகள் அதிகம் நிறைந்த தியாகராயநகர், அண்ணா நகர், மயிலாப்பூர், புரசைவாக்கம், அடையார், சவுகார் பேட்டை, பாரிமுனை, என்.எஸ்.சி.போஸ் ரோடு, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், குரோம்பேட்டை, தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடைகளில் அட்சயதிருதியை நாளான இன்று நகைகள் வாங்க பெண்கள் கூட்டம் அலைமோதியது.
சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து நகைக்கடைகளிலும் தங்க நகை வியாபாரம் அமோகமாக இருந்தது.
கடைகளில் வாடிக்கையாளர்களை கவர புதுப்புது டிசைன்களில் ஏராளமான நகைகளை அடுக்கி வைத்திருந்தனர். பெண்கள் நல்ல நேரம் பார்த்து நகை வாங்கினார்கள். அட்சய திருதியை அன்று ஏதாவது ஒரு தங்கநகை வாங்க வேண்டும் என்பதற்காக கம்மல், வளையல், செயின், மோதிரம், பிரேஷ்லெட், நாணயம் போன்றவற்றை வாங்கிச் சென்றனர்.
அட்சய திருதியை நாளில் சென்னையில் தங்க நகைகள் விற்பனை குறித்து சென்னை தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் விற்பனை சங்கத் தலைவர் ஜெயந்திலால் செலானி கூறுகையில், ‘இன்று சென்னையில் தங்கநகைகள் விற்பனை சிறப்பாக இருந்தது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் மக்கள் ஆர்வத்துடன் தங்க நகைகளை வாங்கிச் சென்றனர். கடந்த ஆண்டைவிட கூட்டம் குறையவில்லை. தங்கத்தின் விலை உயர்வாக இருந்தபோதிலும் மக்கள் மத்தியில் தங்க நகைகள் வாங்கும் ஆர்வம் குறையவில்லை. வாடிக்கையாளர்கள் அட்சியதிருதியை நன்நாளில் மிகுந்த மகிழ்ச்சியுடன் நகைகள் வாங்கினார்கள்’ என்று தெரிவித்தார்.
சென்னை தங்கநகைகள் மற்றும் வைரநகைகள்விற்பனை சங்கத்தின் பொதுச்செயலாளர் சாந்தகுமார் நகைகள் விற்பனை குறித்துக் கூறுகையில், ‘அட்சயதிருதியை நன்நாளில் மக்கள் ஆர்வமாக தங்க நகைவாங்கி வருகின்றனர். விற்பனை முடிவதற்குள் ஒட்டுமொத்தமாக சென்னையிலும், தமிழகத்திலும் தங்கநகைகள் விற்பனை அளவை கூறுவது கடினம். இருந்தாலும், சென்னையில் விற்பனையைப் பொறுத்தவரை மாலைவரை தங்கநகைகள் 1000 கிலோவும், தமிழகத்தில் 2 ஆயிரம் கிலோவும் விற்பனையாகி இருக்கும் என கருதுகிறோம். இது உறுதியான மதிப்பீடு இல்லை. இதற்கு மேலும் அதிகரிக்கலாம்’ எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.