அஞ்சலிக்காக பெரியபாண்டியின் உடல் மாலை 6 மணிவரை விமான நிலையத்தில் வைக்கப்படும்
கொளத்தூர் கொள்ளையர்களை பற்றி துப்பறிந்து ராஜாஸ்தான் வரை சென்று போராடிய ரியல் தீரன் பெரியபாண்டியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சென்னை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் தற்போது, விமான நிலையத்தின் 5வது கேட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பேன்ட் வாத்தியங்கள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் மாஃபா பாண்டிய ராஜன், ராஜலட்சுமி, தலைமை செயலாளர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
பெரியபாண்டியனின் உடலுக்கு எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்திவிட்டு நிருபர்களிடம் அளித்த பேட்டியில், ‘ராஜஸ்தான் கொள்ளையரை உடனடியாக கைது செய்ய, அரசு முயற்சி செய்ய வேண்டும். ராஜஸ்தான் முதலமைச்சரை தொடர்பு கொண்டு விரைந்து கைது செய்ய வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சியினர் மற்றும் ஓய்வுபெற்ற காவலர்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இன்று மாலை 6 மணி வரை பெரியபாண்டியின் உடல் சென்னை விமான நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது உடல் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்ருகிந்து சாலைமார்க்கமாக சொந்த ஊரான மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அரசு முறைப்படி இறுதிச்சடங்கு செய்யப்படவுள்ளது.