புதுச்சேரி சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயமாக்கப்படும்… முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு.!!
புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயமாக்கப்படும் என முதலமைச்சர் என்.ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை ஏற்கனவே சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வரும் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகவுள்ளது.
இதற்கிடையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் தமிழ் விருப்ப பாடமாக உள்ளதற்கு சில அரசியல் கட்சிகள் மற்றும் சிலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து, தமிழை கட்டாயப் பாடமாக ஆக்கக் கோரி சில சமூக அரசியல் அமைப்புகள் பள்ளிக் கல்வி இயக்ககம் முன் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தும் இருந்தனர்.
இந்த நிலையில், புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் என்.ரங்கசாமி “புதுச்சேரியில் அரசு நடத்தும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க அரசு வலியுறுத்தி வருகிறது. கர்நாடக அரசின் உத்தரவை ஆராய்ந்து விரைவில் அரசாணை வெளியிடப்படும்” என கூறியுள்ளார்.