கனமழை எதிரொலி : புதுச்சேரி, காரைக்கால் – நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை!
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது!
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து வருவதாகவும் ,இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி சூறாவளி புயலாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நவம்பர் 26 முதல் நவம்பர் 28 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகள் மற்றும், அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனையடுத்து, நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் நாளை 27.11.2024 புதன்கிழமை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும், அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.