தமிழிசை மீதான ஊழல் புகாரை வெளியிடுவேன்.! புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி.!
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மீதான குற்றசாட்டுகளை வெளியிடுவேன் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இன்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி , புதுச்சேரி மாநில அரசு பற்றியும், புதுச்சரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பற்றியும் தனது விமர்சனத்தை முன் வைத்தார். புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை முதல்வர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், பொதுப்பணித்துறையில் 20 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள். கலால்துறை முறைகேடு தொடர்பாக நிதித்துறை செயலாளர் ராஜூ, கலால்துறை துணை ஆணையர் சுதாகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நகரப்பகுதியில் அமைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைக்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்க 170 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.
இதனை அமைக்கும் பொறுப்பு மத்திய அரசு நிறுவனமான ரெயில்டெல்லுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் அவை, தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் வகையில் மேற்கண்ட இருவரும் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசு செயலாளராக இருந்த அருண் புதுச்சேரி தலைமை செயலாளருக்கு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் முகாந்திரம் இருந்த காரணத்தால், அதனை புதுசேரி தலைமை செயலாளர் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளார். உள்துறைதான் அவர்களுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னர் தான் இருவரும் மாற்றப்பட்டு உள்ளனர். தலைமை செயலாளர் இதில் நடவடிக்கை எடுக்காதிருந்தால் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது. முதலமைச்சரின் அனுமதி அல்லது தலையீடு இல்லாமல் அந்த அதிகாரிகள் இவ்வாறு செய்து இருக்க மாட்டார்கள்.
முதலமைச்சர் மற்றும் புதுச்சேரி அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளேன். ஆனால் அவர்கள் பதில் சொல்வதில்லை. புதுச்சரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மட்டும் தற்போது வரை பதில் கூறி வருகிறார். விரைவில் துணைநிலை ஆளுனர் தமிழிசை மீதான ஊழல் புகாரையும் வெளியிடுவேன். இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என தனது குற்றசாட்டுகளை முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன் வைத்துள்ளார்.